அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

போரின் இறுதிக் கட்டத்தில் தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் இரண்டு முயற்சிகள்: விக்கிலீக்ஸ்

போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை இலங்கையை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009 மே 17ஆம் திகதி இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில் மே 17ஆம் திகதி இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போர் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை மே 19ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் அதிக எண்ணிக்கையான மக்கள் இன்னமும் இருப்பதாக மன்னார் ஆயர் தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாகவும் பிளேக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எஞ்சியுள்ள புலிகள் சரணடையத் தயாராக இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதாக நோர்வே தூதுவர் தன்னிடம் கூறியதாகவும் பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள போராளிகளை சரணடைவதற்கான நடுநிலையாளர் ஒருவரை ஏற்க வைப்பது தொடர்பாகவே தான் இலங்கை அதிகாரிகளுடன் அன்றைய நாள் முழுவதும் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். மே 17ஆம் திகதி அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை நடுநிலையாளராக ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளை சரணடைவதற்கு ஏற்பாடு செய்ய முன்வருமாறு கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் போர் முடிந்துவிட்டது என்று கூறி கோத்தபாய ராஜபக்ஷ அந்த நடுநிலை முயற்சியை ஏற்க மறுத்துவிட்டதாகவும், ஆனால் சரணடையும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு படையினருக்கு தான் அறிவுறுத்தியிருப்பதாக அவர் கூறியதாகவும் பிளேக் அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, அன்றைய நாள் போர் வலயத்தில் இருந்து சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷவை தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். தனது வேண்டுகோளை நிராகரித்த பஷில் ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கமே அதனைப் பார்த்துக்கொள்ளும் என்று கூறிவிட்டதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG