அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 9 மே, 2011

தங்கப் பதக்கத்தை இழக்கிறது இலங்கை

டந்த ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
அந்நாட்டின் வீரர் மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததால், குத்துச் சண்டைப் போட்டியில் 56 கிலோ பாண்டம் எடைப் பிரிவில் அவர் வென்ற பதக்கத்தை இழக்கிறார்.

கோலாம்பூரில் இன்று(8.5.11) இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நீதிமன்ற அமர்விலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேஷியப் பிரதமர் தலைமையிலான அந்த நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மஞ்சு வன்னியராய்ச்சிக்கு விளையாட்டுகளுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுகளை பொறுத்து, இரண்டாம் இடத்தை பெற்ற வேல்ஸ் நாட்டின் ஷான் மெக்கோல்ட்ரிக்குக்கு வழங்கப்படும் எனவும் அந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதுடில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்தான் இலங்கை 72 வருடங்களில் முதல் முறையாக ஒரு தங்கப்பதக்கம் வென்றது.
கடந்த ஆண்டு போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக இடம் பெற்ற சோதனையில், மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரிய வந்ததை அடுத்து, அவரிடமிருந்து பதக்கத்தை இலங்கை ஒலிம்பிக் சங்கம் திரும்பப் பெற்றது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து விளையாட்டு வீரர்களிடமும் வருடத்துக்கு நான்கு முறை ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனை நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று அதன் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறுகிறார்.
மேலும், இது எந்த வகையிலும் 2018 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்த விழையும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்படுத்தாது எனவும், அப்போட்டிகள் தமது நாட்டுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார்.
சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்பாட்டை தடுக்கும் அமைப்பான வாடாவின் தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துகளின் பட்டியலில் உள்ள நாண்ட்ரோலின் எனும் மருந்தின் ஒரு வடிவான 19-நொராண்ட்ரோஸ்டிரோன், மஞ்சு வன்னியராய்ச்சியின் சிறுநீரில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவரது பதக்கம் பறிபோயுள்ளது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG