அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தஞ்சம் கோருவது இடைநிறுத்தம்


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற அரசியல் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதை இடைநிறுத்தி வைக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தஞ்சம் கோரி வருவோரை கடத்தி வருகின்ற ஆட்களின் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கமாகவே இந்த நடவடிக்கையை எடுப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த இரு நாடுகளிலும் தற்போது உள்நாட்டு நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனால், அவை குறித்து மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளதாகவும் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகே 70 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த படகு ஒன்று ஆஸ்திரேலிய கடற்படையினரால் மீட்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் கெவின் ரட் அவர்களின் அரசாங்கம் 2007 பதவிக்கு வந்தது முதல் இதுவரை நூற்றுக்கும் அதிகமான படகுகளில் அகதிகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.
இவர்களில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கணிசமாகும்.
இந்த தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது குறித்து ஆஸ்ரேலிய பிரதமர் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுவருகின்றார்.
அகதிகள் படகு ஒன்று
அகதிகள் படகு ஒன்று
இந்த அகதிகளுக்கான விண்ணப்பங்களை நிறுத்தி வைப்பது என்று எடுக்கப்பட்டுள்ள முடிவு, இப்படியாக வருகின்ற படகுகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
இலங்கையிலும், ஆப்கானிஸ்தானிலும் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே தாம் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்று பிரதமரின் தரப்பினர் கூறுகின்ற போதிலும், ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடக்கவிருக்கின்ற இந்த ஆண்டில், எப்போதுமே ஒரு சர்ச்சையை கிளப்புகின்ற இந்த விவகாரத்தை தணிப்பதற்கான அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக இது விமர்சிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் ,வருகின்ற படகுகள் திருப்பியனுப்பப்படாது என்றும், அவற்றில் வருபவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்படுவார்கள், ஆனால், புதிதாக வருபவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது என்றும் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் கூறுகிறார்.
இலங்கையர்கள் தொடர்பான விவகாரங்களை மூன்று மாதங்களிலும், ஆப்கானியர்களின் விடயத்தை 6 மாதங்களிலும் மறுபரிசீலனை செய்வோம் என்றும் ஆஸ்ரேலியா கூறுகின்றது.
ஆனால், ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை இந்தோனேசியா எதிர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக இந்து சமுத்திரத்தின் ஊடாக படகுகளில் வருவோ தரித்துச் செல்லும் இடமாக இன்றுவரை இந்தோனேசியா திகழ்கிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவினால், தற்போது இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பலர் அங்கேயே கால அளவின்றி தொடர்ந்து தரித்திருக்க நேரிடும் என்பது அந்த நாட்டின் கவலை.
இந்த விவகாரம் இந்த இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் அண்மையில் பேச்சுவார்த்தையையும் நடத்தியிருந்தனர்.
சட்டத்துக்குப் புறம்பாக தமது நாட்டுக்கு வரும் குடியேற்றக்காரர்களை தடுக்க பல காலமாக இந்தோனேசியா போராடிவருவதுடன், அவர்களுக்கு உதவ நிதி ரீதியாகவும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றது. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG