நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு கிடைத்துள்ள வெற்றி போதுமானதாக இல்லாவிட்டாலும் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக குரல்கொடுப்பதற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவாகவே இதனைக் கருதுவதாக ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரச ஆதரவும் பின்புலமும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களுக்கு இருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களுடன் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதே என்று டக்ளஸிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், மக்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய தருணத்தில் தற்போது உள்ள போதிலும் தமக்கெதிராக ஊடகங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களே தமது கருத்துக்கள் சென்றடைவதை தடுத்துள்ளதாக கூறினார்.
முன்னர் ஒரு ஆசனத்துடன் இருந்த தாம் தற்போது மூன்று ஆசனங்களுடன் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்காக பணியாற்ற முடியும் என்று யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கவுள்ளதாகவும் ஈ.பி.டி.பி தலைவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்துக்கு ஏற்ப ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மக்களுக்கான அரசியல் உரிமையை மிக விரைவில் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக