பாஷையூர் மீன்சந்தை முதல் கொழும்புத்துறை ஊடாக துண்டிச்சந்தி வரையான கடற்கரை வீதியே தற்சமயம் துரித புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னர் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து தற்சமயம் பொதுமக்களின் பாவனைக்கென மேற்படி வீதிகள் திறந்து விடப்பட்டுள்ளபோதும் அவ்வீதியானது பாவனைக்குதவாத வகையில் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் இவ்வீதியில் அமைந்துள்ள மூன்று பாரிய வடிகான்களும் முற்றாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
இதனையடுத்து யாழ். மாநகரசபை முதல்வர் யாழ். மாநகரசபை ஊடாக விசேட நிதியொதுக்கீட்டினை மேற்கொண்டதன்மூலம் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் ஆரம்பமாகியுள்ளன. கடற்கரை வீதியானது புனரமைப்பு செய்யப்படும் அதேவேளை வீதியில் அமைந்துள்ள மூன்று வடிகான்களுக்கு மேலாக பாரிய கொன்கிரீட் மதகுகள் நிர்மாணிக்கப்படும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்றுகாலை அப்பகுதிக்கு சென்று புனரமைப்பு பணிகளைப் பார்வையிட்ட யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அப்பணிகளை துரிதப்படுத்தும் பணிப்புரைகளையும் வழங்கினார். இதேவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த கொழும்புத்துறை பாதுகாப்புப் படைகளின் கட்டளை அதிகாரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளை அடுத்து கடற்கரை வீதியில் காணப்பட்ட சகல காவலரண்களும் அகற்றப்பட்டதை தெரியப்படுத்தியதுடன் வெள்ளநீர் கடலுக்கு செல்லுவதற்கு தடையாக இருந்த சகல பாதுகாப்பு அரண்களும் முற்றாக அகற்றப்பட்டுள்ளதையும் யாழ். முதல்வருக்கு தெரியப்படுத்தினார்.
யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். கரையோரப்பகுதிகளுக்கு சென்று வீதி புனரமைப்பு பணிகளை இன்றையதினம் பார்வையிட்டபோது யாழ். மாநகரசபை பொறியியல் பிரிவைச்சேர்ந்த மேற்பார்வையாளர் ஆர்.எஸ்.சேவியர் மற்றும் களமேற்பார்வையாளர் பீ.ஜெயராஜா ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக