பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
துபாயில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களைப் பெற்றது. உபுல் தாரங்க 77 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 50 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சயீட் அஜ்மல் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்அணி முதல் ஓவரிலேயே 2விக்கெட்டுகளை இழந்தது. லஷித் மாலிங்க வீசிய அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் மொஹமட் ஹாபீஸும் 5 ஆவது பந்தில் இம்ரான் பர்ஹாத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பாகிஸ்தான் அணி நெருக்கடியிலிருந்து மீளவே இல்லை. 46.3 ஓவர்களில் 210 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் உமர் அக்மல் 91 ஓட்டங்களைப் பெற்றார். சஹீட் அவ்ரிடி 29 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் லஷித் மாலிங்க 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. 3 ஆவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெறவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக