அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - பாராளுமன்றத்தில் சந்திரகுமார்

ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் இன்று (4) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது
.கௌரவ சபாநாயகர் அவர்களே!

நீதித்துறை பற்றி இந்த அமர்விலே நான் கவனத்திற்குரிய சில விடயங்களைப் பற்றி இங்கே கூற விரும்புகிறேன்.
நீதி என்பது தனியே சட்டங்களால் மட்டும் வடிவமைக்கப்பட்டதல்ல. அது எங்களுடைய இதயத்தில், எங்களுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நிலைபெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். அப்போதுதான் நாடு தன்னிறைவைப் பெறும்.
இந்த நாட்டிலே இனத்தின் பேராலும் மொழியின் பேராலும் மதத்தின் பேராலும் பிரதேசங்களின் பேராலும் நீதி பாரபட்சமாகியிருப்பதை நாம் எப்படிச் சொல்வது? இதற்கு என்ன அர்த்தம்?
எங்களுடைய மனதில் குறைபாடாக இருந்த நீதி காராணமாகவே இந்த நாடு பேரழிவுகளைக் கண்டது. இந்த நீதிக் குறைபாட்டினால்தானே பல லட்சம் உயிர்கள் பலியாகியிருக்கின்றன.
இந்த நாட்டிலே இதுவரை தீர்க்கப்படாதிருக்கும் பல பிரச்சினைகளுக்கு எங்கள் மனங்களிலும் எங்களுடைய சமூக வழக்கத்திலும் இருக்கும் நீதிக் குறைபாடுதானே காரணம்.
இந்தக் குறைபாட்டோடுதான் இந்த நாடு கடந்த அறுபது ஆண்டுகளாக ஆட்சிநடாத்தி வருகிறது.
ஆனால் இனியும் இந்த நீதிக் குறைபாடுகள் வேண்டாம். இந்தக் குறைபாட்டை நாங்கள் எல்லோருமாக இணைந்து போக்குவோம். அதற்கு இந்தக் காலகட்டத்தை நாம் எல்லோருமாக இணைந்து பயன்படுத்திக் கொள்வோம். இந்தச் சந்தர்ப்பத்தை நாட்டின் முன்மாதிரியான காரியங்களுக்காகப் பயன்படுத்தி வரலாற்றைப் படைப்போம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே

போர் முடிந்த பிறகும் - வடபகுதியில் - இன்னும் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தபடியே இருக்கின்றார்கள்.
நேற்று இங்கே அவசரகால நிலைபற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த மாதம் உருவாகவுள்ள அனர்த்த நிலையைப் பற்றிய அவசரகால நிலையைப் பற்றியே நான் சிந்திக்கிறேன்.
அந்த மாவட்டங்களில் மீளக்குடியேறிய மக்கள் இன்னும் சில நாட்களில் பெய்யப்போகும் பருவமழையினால் பெரிதும் பாதிக்கப்படப்போகிறார்கள். அந்த மக்களுக்கான வீட்டு வசதிகள் பூரணப்படுத்தப்படவில்லை.
தற்காலிக வீடமைப்பு முயற்சிகள் இன்னம் முழுமைப்படவில்லை. இதனால் மக்கள் பெரும் அனர்த்தத்திற்குள் சிக்கப்போகிறார்கள். அங்கே பல இடங்களிலும் மக்கள் தங்குவதற்கு பாடசாலைக் கட்டிடங்கள் கூட சீராக்கப்படவில்லை. மழைகாலத்தில் பல பாடசாலைகள் இயங்கமுடியாத நிலையில்தான் இருக்கின்றன.
ஆகவே எதிர்வரும் பருவமழைக்காலம் என்பது மிகவும் நெருக்கடியைத் தரும் ஒரு அபாயநிலைமையே காணப்படுகிறது.
இது அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தரும் ஒரு முக்கிய விடயமாகும். அகதிகளின் பிரச்சினையும் மீள்குடியேற்ற விவகாரமும் சர்வதேசத்தின் கவனத்திற்குரியவை என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எந்த உள்நாட்டு நெருக்கடியும் ஒரு கட்டத்துக்கு மேல் சர்வதேசத்தின் கவனத்தைப் பெறும். அது அடுத்த கட்டமாக சர்வதேச அழுத்தமாக மாறும் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
ஆகவே உருவாக இருக்கும் எந்த அனர்த்தத்துக்கும் நாம் இடமளிக்கத் தேவையில்லை என இங்கே கூறவிரும்புகிறேன்.
கூடிய விரைவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பை இந்த மன்று இந்த நாடு நாட்டிலுள்ள அனைவரும் கட்சி பேதங்களின்றி பிரதேச வேறுபாடுகளின்றி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர்களுக்கான வீட்டு வசதி, மீள் குடியேற்றத்தை இந்த ஆண்டுக்குள் முழுமைப்படுத்துவது தடுப்பு முகாம்களிலுள்ளோரின் விடுதலை அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் அவர்கள் தங்கள் பிரதேசத்தில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என முக்கியமான நடவடிக்கைகளுக்காக நாம் எல்லோரும் கூடி முயற்சிப்போம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கு முதற்கட்டமாக இந்த நடவடிக்கை அமையட்டும். அத்துடன் இது ஒரு நல்ல முன்னுதாரமான நடவடிக்கையாகவும் அமையட்டும். இது அமைதிக்கான பயணத்தைக் குறித்த நம்பிக்கையையும் திருப்தியையும் எல்லோருக்கும் அளிக்கட்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறவும் விவாதிக்கவும் வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இந்த நாடாளுமன்றம் கொண்டிருக்கக் கூடாது என்று நான் இந்த மன்றைக் கேட்டுக் கொள்கிறேன்.
அது அபிவிருத்திப் பிரச்சினைகளாக இருக்கட்டும். ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளாக இருக்கட்டும். இனப்பிரச்சினை தொடர்பான விடயமாக இருக்கட்டும். அல்லது உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அல்லது அரசியற்கட்சிகளின் செயற்பாடுகளாக இருக்கட்டும்.
எதுவானாலும் அவற்றைப் பற்றித் திரும்பத்திரும்ப இந்த மன்றிலே விவாதிக்கப்படும் நிலை இருக்குமானால் இந்த மன்று அதன் அர்த்தத்தையும் அதனுடைய பெறுமானத்தையும் இழந்ததாகவே இருக்கும் என்பதையும் இங்கே நான் சுட்டிக்காட்டுகிறேன்.
ஆகவேதான் நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து ஒரு புதிய மரபையும் ஒரு நல்ல நீதியான வாழ்வையும் கட்டியெழுப்புவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன்; இங்கே இன்னொரு விடயத்தையும் பற்றிக் கூற விரும்புகிறேன்.
இந்த மாண்புக்குரிய சபையிலே எதையும் எப்படியும் பேசலாம் என்ற போக்கு வளர்ந்து செல்கிறது. கருத்துகளை முன்வைப்பதற்கு இருக்கும் உரிமை என்பது ஜனநாயகத்தின் உயர்ந்த பெறுபேறாகும்.
ஆனால், அந்த ஜனநாயகத்தைத் துஸ்பிரயோகம் செய்யும் விதமானவகையில் சிலவேளைகளில் இந்த மன்றில் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதும் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் இந்த மன்றின் முக்கிய கடமையாகும்.
அத்துடன், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாம் என்ற வகையிலும்,
நாட்டின் சட்டத்தையும் நீதியையும் உருவாக்கும் அவை இது என்ற வகையிலும்,
நாட்டினது உயர்ந்த அவை இது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நாம் அனைவரும் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசியற் பேதங்களைக் களைவதில் நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த மன்று முன்னுதாரணமாகக் கொண்டால் நாட்டிலுள்ள மக்கள் அதனைப் பின்பற்றுவார்கள்
ஆகவே இந்த மன்றில் அதற்குத் தகமையான முறையில் நடந்து கொள்வது சிறப்பு. அத்தகைய ஒரு பதிய பண்பாட்டு உருவாக்கத்துக்காக இந்த மன்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தின் தீர்மானங்கள் அங்கே அறிவிக்கப்படுகின்ற விடயங்கள் எல்லாம் மக்களின் கவனத்துக்குரியவை. அவை நேரடியாகவே மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் சம்மந்தப்பட்டவை.
எனவே இங்கே இந்த அமர்வில் ஏற்கனவே நான் பல தடவைகள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளை மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிலும் இருக்கிறேன். அதேவேளையில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றித் திரும்பத்திரும்ப இங்கே பேசுவதை விரும்பாத நிலையிலும் இருக்கிறேன்
ஆனால் மக்களின் பிரச்சினைகள் பலவும் அப்படியேதான் இருக்கின்றன. இது ஏன்?
இதற்குத் தனியே அரசாங்கம் மட்டும் காரணமல்ல. ஆனால், அரசாங்கத்துக்கு இவற்றில் முக்கிய பொறுப்புண்டு.
அதேவேளை - அரசாங்கத்துடன் சகல தரப்பினரும் ஒத்துழைத்து, எல்லோரும் இந்த நாட்டினர் என்ற எண்ணத்தோடு செயற்படவேண்டும். முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எல்லோரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்று இந்த மன்றைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் நீதியான மக்கள் என்பதை நமது செயற்பாடுகள் நிரூபிக்கட்டும். அப்போதுதான் நீதித்துறைக்கும் மதிப்புண்டாகும். இந்த மன்றுக்கும் பெறுமானம் இருக்கும்.
ஆகவே நாம் இதைக்குறித்துச் சிந்திப்போம். இதை நோக்கிச் செயற்படுவோம் என்று கூறி அமர்கிறேன்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG