இந்திய ஆளுகைக்குட்பட்ட கஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் குறைந்தது 85 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சுமார் 300 பேர் வரை காயமடைந்திருக்கிறார்கள். மேலும் பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒதுக்குப்புற மலைப்பிரதேசமான லடாக் பிராந்தியத்தில் இருக்கும் லே நகரில் தான் இந்த திடீர் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது.இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கணிசமாக ஈர்க்கும் லே நகரம், இமயமலையில் மலையேறும் சுற்றுலாப் பயணிகளின் மலையடிவார தங்கு தளமாகவும் உள்ளது.
லே நகரமும் அதன் அண்டைய கிராமங்கள் பலவும் இந்த திடீர் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இருந்த கட்டிடங்கள் பலவும் வெள்ளத்திலும் மண்சரிவிலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நடு இரவில் சத்தமில்லாமல் பெருக்கெடுத்துள்ள இந்த பெருவெள்ளம் பலரையும் தூக்கத்திலேயே தூக்கிச்சென்றது.
லே நகரின் விமான நிலையம் உட்பட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
லே நகரின் சாலைகள் பலவும் மோசமாக சேதமடைந்திருப்ப தோடு, லடாக் பிராந்தியத்தை கஷ்மீரின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டிருப்பதால், அங்கு போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அங்கு நடைபெறும் மீட்புப்பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களில் சிலரும் கூட இந்த திடீர் பெருவெள்ளத்திற்கு பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லடாக் பிராந்தியம் இமயமலைப் பகுதியின் உயரமான இடத்தில் இருக்கிறது. இந்த பகுதியில் பெருமழை என்பது மிகவும் அபூர்வமானது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக