அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 14 மார்ச், 2010

கண்டி மாவட்டத்தில் தான் போட்டியிடுவது தொடர்பில் ஜ.ம.முன்னணி தலைவர் மனோ கணேசன் விளக்கம்



கடந்த பாராளுமன்றத்தில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் சிங்களவர்கள், மூவர் முஸ்லிம்கள். எமது சகோதர இனத்தவர்கள் தங்கள் பிரதிநிதித்துவங்களை தக்கவைத்து கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.ஆனால் இந்த உரிமை ஏன் எமக்கு இல்லை என்பது தான் எனது கேள்வி
.

ஏனைய சகோதர இனத்தவர்களுக்கு இருக்கின்ற அதே உரிமையும், வாய்ப்பும் எமக்கு இருக்கவும், கிடைக்கவும் கூடாதா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று கண்டி பன்விலை சோழகந்தை தோட்டத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைப்பாளளர்கள் மத்தியில் உரையாற்றி மனோ கணேசன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு, நுவரெலியா, பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் அறிவும், நாகரிகமும் கொண்ட கண்டி தமிழ் சமூகத்தினரால் ஏன் தங்களது சொந்த இனத்து பிரதிநிதியை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லை என்ற கேள்வி இன்று எமது முயற்சியினால் கண்டி மாவட்டம் முழுக்க எதிரொலிக்கின்றது.
1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே தமிழர் ஒருவர் கண்டி மாவட்டத்தில் கடைசியாக தெரிவு செய்யப்பட்டார். அதற்கு பிறகு 2000ம், 2001ம், 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்ட அனைத்து தமிழர்களும் தோல்வியடைந்தார்கள். இதற்கான காரணங்கள் எவை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த தேர்தல்களை எடுத்துக்கொண்டால், மூன்று பிரதான காரணங்களால் தமிழ் பிரதிநிதித்துவங்கள் கண்டி மாவட்டத்தில் பறிபோயுள்ளன.
முதலாவது காரணம், தேர்தல் காலங்களிலே தமிழர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதும், தமிழ் வேட்பாளர்கள் தமது ஜனநாயக பிரசாரங்களை முன்னெடுப்பதும் கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களிலே தடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது காரணம், நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தமிழ் வாக்காளர்கள் தங்களது விருப்பு வாக்குகளை எந்த வேட்பாளருக்கு வழங்குகின்றோம் என்பதில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்துகொள்ளாதது ஆகும்.
மூன்றாவது காரணம், வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட தமிழர்களில் கணிசமானோர் தேர்தல் காலங்களிலே வாக்களிப்பதில் அக்கறை காட்டாதது ஆகும்.
ஆகவே மேற்கண்ட குறைபாடுகளை அகற்றி, 1994 ம் ஆண்டிற்கு பிறகு காணாமல் போய்விட்ட கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீட்டெடுப்பதுதான் எனது முதன்மை குறிக்கோளாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG