
இலங்கையின் முன்னாள் இந்திய தூதுவரும், தற்போதைய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளருமான நிருபமா ராவ் அம்மையார் இரண்டு நாள் விஜயமாக நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதால் அவரது இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்து வருகையில், இந்தியத் தூதுவரின் கொழும்பு வருகை இடம்பெறுகின்றமை மிகவும் முக்கியமானதாகும்.
இந்திய வெளிவிவகாரச் செயலரின் இலங்கை வருகை வழமையான இரு தரப்பு பரஸ்பர நலன் நோக்கிய உறவாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது.
எனினும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து கொழும்பு, இந்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கோடிகாட்ட வேண்டும் எனப் புதுடில்லி கருதுவதாகவும் புதுடில்லியின் அந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது கொழும்பு விஜயத் தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் எனவும் இந்தியத் தரப்புச் செய்திகள் சில தகவல் வெளியிட்டன.
அவரது இலங்கை விஜயத்தையொட்டி இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவரின் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் இன்று இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக