அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 22 செப்டம்பர், 2012

தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் ஈ.பி.டி.பி எடுத்துரைப்பு!


லங்கைக்கான விஐயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகளை சந்தித்திருந்த ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான குழுவினர் தமிழ் பேசும் மக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்தும், மற்றும் பல்வேறு நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் எடுத்து விளக்கியிருந்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-->
பாரம்பரிய கைத்தெழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அமைச்சு அலுவலகத்தில் இன்று நடந்த இச்சந்திப்பின் போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எடுத்து விளக்கிய போது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் ஆரம்பித்து, கட்டம் கட்டமாக மேலதிக அதிகாரங்களை பெறுவதே நடைமுறை சாத்தியமான வழிமுறை என்றும், இதையே ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் எடுத்து விளக்கப்பட்டது.

இதன்போது தமிழ் பேசும் மக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு எடுத்து விளக்கிய போது,....
அர்த்தமற்ற எதிர்ப்பு அரசியல் தமிழ் பேசும் மக்களுக்கு அழிவுகளை தவிர வேறு எதையுமே பெற்றுத்தந்திருக்கவில்லை.

அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் மதிநுட்ப வழிமுறையை மறந்து தொடர்ந்தும் பகைமையை வளர்க்கும் எதிர்நிலை வழிமுறையானது அரசியல் தீர்வை ஒருபோதும் பெற்றுத்தராது.

ஆகவே கடந்த கால படிப்பினைகளை பாடமாக கொண்டு இணக்க அரசியல் வழிமுறை மூலமே எமது மக்களை பாதுகாக்கவும், எமது கௌரவத்தை பேணிக்காக்கவும், எமது உரிமைகளை பெறவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும்.
அதற்காக,.. அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பிரதான எதிர்க்கட்சிகளும் பங்கெடுக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தினர் இலங்கை விவகாரம் குறித்து நடைமுறைச் சாத்தியமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதன் மூலமே இனக்குரோதங்களை தொடர்ந்தும் வளர்க்காமல் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

இதேவேளை,.. நடந்து முடிந்த துயர்தரும் அழிவுகளுக்கான பொறுப்பு கூறும் விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து அரசியல் தீர்வு நோக்கியும், அபிவிருத்தி நோக்கியும்  செல்வதனை பிரதான இலக்காக கருத்தில் கொண்டே அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டும்.

மாறாக,... அழிவுகளை ஆதாரமாக வைத்து அதில் அரசியல் ஆதாயம் தேடுவதாலும், பகைமைகளை வளர்ப்பதன் மூலமும் யாரும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையோ, அன்றி அரசியல் தீர்வையோ பெற்று விட முடியாது.

ஆகவே, ஐ.நா சபை உட்பட சர்வதேச சமூகத்தினர் நடை முறைச்சாத்தியமான வழிமுறையிலான அரசியல் தீர்வு முயற்சிக்கு ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டு இலங்கை விவகாரத்தை கையாள்வதையே நாம் விரும்புகின்றோம்.

இதேவேளை கடந்த கால அழிவுகளில் இருந்து மீண்டெழுவதற்கும், தமது வாழ்வாதார வசதிகளை தமிழ் பேசும் மக்கள் மேலும் பெறுவதற்கும் அதிகளவிலான நிதியுதவிகளின் தேவை உள்ளது என்பதையும் எமது மக்களின் சார்பில் மனதாபிமான நோக்கில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) அறிக்கையின் பரிந்துரைகள் யாவும் நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் விடயங்களையே கொண்டிருக்கின்றன. ஆகவே அதை நடைமுறைப் படுத்துவதற்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம்.

அதேவேளை, மேற்படி அறிக்கையில் ஈ.பி.டி.பி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து விளக்கமளிக்கையில் ஈ.பி.டி.பி தலைவர் மேற்படி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் கூறியவற்றிற்கும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் ஈ.பி.டி.பி தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் என அதிகார பூர்வ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொழிப்புரைக்கும் இடையில் பாரிய முரண்பாடு இருப்பதனை ஆதாரங்களுடன் ஐ.நா பிரதிநிதிகளிடம் எடுத்து விளக்கியிருந்தனர்.

இவ்வாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா பிரதிநிதிகளிடம் எடுத்து விளக்கிய ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியினர் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும் அவர்களை அழிவில் இருந்து பாதுகாப்பது குறித்தும் தாம் அரசியல் சுயலாப நோக்கமின்றி யதார்த்த பூர்வமாக செயற்படுவதால் எதிர் கொள்ளும் சாவால்கள் குறித்தும் எடுத்து விளக்கியிருந்தனர்.

தம்மீது திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட அவர்கள் சார்ந்த  ஊடகங்களும் பொய்களையும் புனைகதைகளையும் அவிழ்த்து விட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் சிலர் தமது அரசியல் தஞ்ச கோரிக்கையினை வலுப்படுத்துவதற்காக ஈ.பி.டி.பி யின் பெயரை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும், காணாமல் போனோர் தொர்பாக தமது கருத்தை விளக்கிய போது என்ன நடந்தது என்பதனை அறிய வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி கொண்டிருக்கும் அக்கறை குறித்தும் எடுத்து விளக்கப்பட்டது.

கனி மெகாலி அவர்கள் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பின் போது  ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்களான, எஸ். தவராஜா, ராஐ;குமார் (றொபின்) ஆகியோர் உட்பட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

BATTICALOA SONG