அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கு எதிராக பகலில் குரலெழுப்பும் முஸ்லிம் அமைச்சர்கள் இரவில் ஜனாதிபதி காலில் மண்டியிடுகின்றனர்: சஜித்


முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம், அவர்களுக்காக குரல் கொடுப்போம் எனக்கூறி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பகலில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கப்படும் போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இரவிலே ஜனாதிபதியின் வீட்டுப்போய் அவரின் காலில் மண்டியிட்டுக் கொள்கின்றனர். இதுதான் இன்றைய முஸ்லிம் அமைச்சர்களின் நிலை' என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக மக்கள் அலை பெருகியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. அமைச்சர் ரவுப் ஹக்கீம், முஸ்லிம் மக்களுக்கு ஒரு முகத்தினையும், ஜனாதிபதிக்கு ஒரு முகத்தினையும் காட்டி அரசியல் நாடகத்தினை நடத்துகின்றார். மக்களாகிய நீங்கள் பெரிய பிரேமதாசவின் நடவடிக்கையினை கண்டுள்ளீர்கள். எதிர்காலத்தில் இந்த சின்ன பிரேமதாசவின் நடவடிக்கைகளை காணவுள்ளீர்கள். சகல இனமக்களையும் சமமாக மதித்து சகலத்தினையும் ஒரு கரண்டியினால் பங்கிட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எனது தந்தை பௌத்த சாசன அமைச்சினை உருவாக்கும் போது முஸ்லிம், இந்து மற்றும் கத்தோலிக்க கலாசார அமைச்சுக்களை உருவாக்கி சகல இனமக்களின் கலாசார விழுமியங்களை பாதுகாத்தார். ஆனால் இந்த அரசு முஸ்லிம், தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்களில் கைவைத்துள்ளது. இந்நாட்டிலே சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெரும்பான்மை சமூகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கையிருக்க வேண்டும். எனது அரசியல் பயணத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை இனபென்பது இல்லை. எல்லோரும் ஒரே இனம் என்ற நோக்கு எனக்குள்ளது. இந்நாட்டிலுள்ள அனைத்து இனமக்களையும் ஒன்றுபடுத்தும் பிரேமதாசவின் திட்டத்தினை மூவின மக்கள் வாழும் கிழக்கு மண்ணிலிருந்து ஆரம்பிக்கவுள்ளேன். இஸ்லாம் மதம் எனது தந்தைக்கு தைரியத்தினையும், சக்தியையும் கொடுத்தது. எனவே செய்வதனை சொல்லும் சொல்வதனை செய்யும் பிரேமதாசவின் யுகத்தினை ஏற்படுத்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதன் முதற்படியாக கிழக்கு மாகாண தேர்தலில் மக்கள் அனைவரும் கட்சி பேதம் பாராமல் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்' என்றார். இக்கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர்களான முஜீபுர் றஹ்மான், பிரேமலால் கொஸ்தா, மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார், வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG