அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஏற்றுமதி விடயங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதானது எமது மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்


பா ராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் நேற்று 21.08.2012 இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான நிபந்தனைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.
கௌரவ குழுக்களின் பிரதித் தலைவரே, இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான நிபந்தனைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு எனது கருத்துக்களையும் தெரிவிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எங்களுடைய பிரதேசங்கள் போரினால் அழிவடைந்துள்ள  நிலையில், மீளவும் அங்கு விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையிலே, அவர்களது  நலன்கள், தேவைகளை  நான் இச்சந்தர்ப்பத்திலே முன்வைக்க விரும்புகின்றேன். வன்னி மாவட்டத்தில் குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக மக்கள் மீள்குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள். தற்பொழுது, அவர்களின் - விவசாயிகளின் - வாழ்க்கையில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்னும் ஏராளமானமுன்னேற்றங்கள்  ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது. இவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே, குறிப்பாக, இந்த நான்கு மாவட்டங்களில் பெரும் பகுதியான தொழிற்றுறையைச் சார்ந்தவர்கள் விவசாயிகளாக இருக்கின்றார்கள்; இவை விவசாய மாவட்டங்களாகும். எனவே, இவர்களது வாழ்க்கையை மேலும் மேம்படுத்துவதற்குரிய பல்வேறு செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, பாரிய குளங்கள் முதற்கொண்டு சிறிய குளங்கள் வரை புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதில் இன்னும் பல முன்னேற்றங்கள் அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் செயற்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, சீரான நீர்ப்பாசன ஏற்பாடுகள் பாரிய நிதி ஒதுக்கீடுகளினூடாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. எமது விவசாயிகள் இந்த மூன்று வருட காலத்தையும் மிகவும் நல்ல முறையில் பயன்படுத்தி, நெல்லுற்பத்தியில் சாதனையான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், கடந்த பெரும்போக பயிர்ச்செய்கையில் கிட்டத்தட்ட 60 000 ஏக்கர் நிரப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை செய்யப்பட்டது. இது வெற்றிகரமான நெற்பயிற்செய்கையாகவும் அதிக விளைச்சலைக்கொண்ட பயிர்ச்செய்கையாகவும் காணப்பட்டது.

இவ்வருடமும் அந்த மாவட்டத்தில் இருக்கின்ற சகல வயல் நிலங்களுக்கும் நீர்ப்பாசன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால்  அங்குள்ள எல்லா வயல்நிலங்களிலும் விவசாயிகள் தங்களது பெரும்போக நெற்செய்கையை செய்வார்களென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். துரதிஷ்டவசமான ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட வேண்டும். தென்னிலங்கை நிலைமைகளுடன் ஒப்பிடும்போது எமது வடபகுதி நிலைமைகள் முற்று முழுதாக வேறுபட்டவை.

விளைச்சல் காலகட்டங்களில் அவர்கள் சந்தைவாய்ப்புப் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அநேகமான விவசாய அமைப்புக்களாலும், விவசாயிகளாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைதான் தங்களது விளைபொருட்களுக்கு உரிய சந்தைவாய்ப்பைப் பெற்றுத்தரவேண்டுமென்பது. உண்மையில் அங்கு நிலைமை அப்படித்தான் இருக்கின்றது. கடந்த பெரும்போக பயிர்ச்செய்கையின்போது எந்தவித இயற்கைப் பாதிப்புக்களுக்கும் உள்ளாகாமல் தரமான நெல்லை எமது விவசாயிகள் உற்பத்தி செய்தார்கள். என்றாலும், அவர்களுக்கான சந்தை வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

கடந்த 2010 - 2011 ஆம் காலகட்டங்களில் கிளிநொச்சி மற்றும் ஏனைய வன்னி மாவட்டங்களின் உற்பத்திகளை அரசாங்கம் பெருந்தொகையான நிதியொதுக்கீடுகளுக்கூடாக கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தினாலும் இம்முறை பாரிய பிரச்சினையை நாங்கள் எதிர்கொண்டிருக்கின்றோம். கெளரவ கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சர் அவர்கள் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு பல்வேறு களஞ்சியசாலைகளை உருவாக்கியிருந்தாலும் அங்கு இன்னும் ஏராளமான களஞ்சியசாலைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. களஞ்சியப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய அதேநேரத்திலே அவர்களுடைய உற்பத்திகளை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால், நீண்டகால யுத்தத்துக்கூடாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்த இந்த விவசாயிகள் இன்று எதுவுமற்ற நிலையில் நம்பிக்கையுடன் அந்த மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, அவர்களது வாழ்க்கையில் ஒளியூட்டுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவர்களது உற்பத்திக்கு நியாய விலை பெற்றுக்கொடுக்கும் வகையில் 'நியாய விலை வரம்பு” ஒன்று நிர்ணயிக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.சில தனியார் வர்த்தகர்கள் அவர்களுடைய ஏழ்மையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏனென்றால், தங்களது விளைபொருட்களைக் களஞ்சியப்படுத்தி  சந்தை வாய்ப்புக்களுள்ள காலகட்டத்தில் அவற்றை விற்பனை செய்யக்கூடிய வசதிகளை அவர்கள் கொண்டவர்களல்லர். கடந்த காலத்தில் அவர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு அந்த நிலைமை இல்லை. தங்களது வாழ்விடங்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் அவர்களுக்கு தங்களது உற்பத்திகளை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கக்கூடிய நிலைமை இல்லை.

அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியார் வர்த்தகர்கள் அவர்களது உற்பத்திகளை நியாய விலைக்குப் பெறாமல் அழுத்தத்துக்கூடாக அவர்களது உற்பத்திகளைப் பெறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவர்களுக்கு உரிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியினை செலவு செய்து வருகின்ற இந்த வேளையில் அவர்களுடைய உற்பத்திகளுக்கு நியாய விலையையும் பெற்றுக்கொடுத்தால் விவசாய நடவடிக்கைகளின் மூலமாக அவர்கள் சிறந்த வாழ்வாதாரத்தை எட்டி விடுவார்கள். அப்போது அவர்கள் அரசாங்கத்தினால் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவுக்கு தங்களது சொந்த உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவர்களாக மாறுவார்கள். மேலும், ஏற்றுமதி விடயங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதானது சில வேளைகளில் எங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். குறிப்பாக, புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் தங்களது பிரதான உணவாக எமது வடபகுதி நெல் உற்பத்திகளையே நாடுகிறார்கள்.

ஆகவே, எமது வடபகுதிகளில் விளைவிக்கப்படும் சிவப்பு நாடு மற்றும் மொட்டைக்கறுப்பன் புளுங்கல் அரிசி   ஐரோப்பிய நாடுகளிலும்  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும்  ஏனையநாடுகளிலும் உள்ள சந்தைகளில்  மிகவும் பிரபல்யமடைந்திருப்பதால்  அவை எவ்வித  தடையுமின்றி எமது புலம்பெயர்ந்த மக்களைச் சென்றடைவதைக் கட்டுப்படுத்தக்கூடாதென்றகருத்தை நான் இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் முன் வைக்கின்றேன்.

இச் சட்டமூலத்தின் ஒரு சரத்தில்  “இலக்காகக் கொண்டுள்ள சந்தைக்காக இந்நாட்டுக்கு வெளியே அனுப்பப்படும் விசேட அரிசி வகை மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஏற்றுமதி செய்வதற்கு இடமளிக்கப்படும்" எனக்   குறிப்பிடப்பட்டுள்ளது.  இது எமது நெல்லை ஏற்றுமதி செய்வதைஎந்தவகையிலும் கட்டுப்படுத்தக்கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரன் அவர்கள் இச் சபையிலே முன் வைத்த கருத்துத் தொடர்பாக நான் ஒருசில கருத்துக்களைத் தெரிவிக்க விளைகின்றேன். இவ்வருடம் சிறுபோகப் பயிர்ச்செய்கையின்பொழுது இரணைமடுக் குளத்திலிருந்து நீர்ப்பாசனம் செய்யப்பட்ட விளைநிலங்களில் சில பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அப் பாதிப்புக்கள் அரச அதிகாரிகளின் திட்ட மிடப்படாதசெயல்களின் விளைவாகவே ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  நான் அவருடைய கூற்றை முற்றுமுழுதாக மறுக்கின்றேன்.

கடந்த மார்ச்  மாதத்தில் நடத்தப்பட்ட  விவசாய அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலே அரசாங்க அதிபர், நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலர்கள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள் யாவரும் கூடிக்கலந்தாலோசித்து இரணைமடுக்குளத்திலிருந்து கிட்டத்தட்ட 8000 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.  ஆனால் துரதிஷ்டவசமாக பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டது. இந்தச் சூழலினாலேயே நீர்ப்பாசனத்தின்போது சிரமங்கள் ஏற்பட்டன. இதேவேளை நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வரட்சியும் பாதிப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

இதேவேனள ஏப்பிரல் 5ஆம் திகதி நீர்ப்பாசனத் திணைக்களத் தகவலின் பிரகாரம் இரணைமடுக்குள நீர்த்தேக்கம் 28.9 அங்குலம்    உயர்வுடையதாகக் காணப்பட்டது.  யூலை 30 ஆந் திகதி வரையில் முடிவடைந்திருக்க வேண்டிய சிறுபோகத்துக்கான நீர் விநியோகம்     ஆகஸ்ட் மாதம் வரையில் அதாவது இப்பொழுதும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஆகவே, மக்களுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பது    தவறானது. மக்களின் விளைச்சல் மற்றும் நீர் வினியோகம் தொடர்பாக  தவறாகக்  கூறி அரசியல் நடத்துவது உங்களையே நீங்கள்  இழிவுபடுத்தும் செயலாகும். இவற்றின் உண்மையான தரவுகளை விவசாயிகளிடமும் மாவட்டச்  செயலகத்திடமும் நீர்ப்பாசனத் திணைக்களத்திடமும் யாரும் பெற்றுக்கொள்ள முடியும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG