அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

நாம் மக்களின் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் கட்சியே தவிர வன்முறை நோய் கொண்டு அலையும் துணை இராணுவக்குழு அல்ல!

நாம் தமிழ் பேசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியே தவிர வன்முறை நோய் கொண்டு அலையும் துணை இராணுவக்குழு அல்ல. இந்த உண்மையை தனது வழமையான கபட நோக்கத்தோடு எம்மீது அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் அண்மையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் வழமை போல் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு எம்மீதான ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாம் துணை இராணுவக்குழு என்றும் ஆயுதங்களோடு நடமாடுவதாகவும் தெரிவித்திருந்த அவர் நாம் வைத்திருப்பதாக அவர் கூறும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது தவிர யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமக்கும் இடையில் முரண்பாடுகளை திட்டமிட்டு தோற்றுவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களை தான் சந்திக்கவிருந்ததாக பொய்யுரைத்து, தமது சந்திப்பை நாமே தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இவைகள் உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதும் எம்மீது அவதூறு பரப்புவதுமான ஒர் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். ஆரம்பங்களில் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக செயற்பட்டிருந்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்தவர்கள். ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளில் எமது தலைமை பங்கெடுத்திருக்கவில்லை என்பதும் அதன் சாதக பாதகங்களில் எமக்கு சம்பந்தம் இருந்திருக்கவில்லை என்பதும் சகலரும் அறிந்த விடயம். எமது மக்களின் அரசியலுரிமைக்காகவும் அபிவிருத்தி மற்றும் அன்றாட அவலங்களுக்கான தீர்வுக்காகவும் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் மத்தியில் நின்று உறுதியுடன் நாம் உழைத்து வந்திருக்கின்றோம். எமது சொந்த பாதுகாப்பிற்காக ஏனைய தமிழ் கட்சிகளைப் போலவே நாமும் வைத்திருந்த சிறு ஆயுதங்களையும் 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து முழுமையாக நாம் ஒப்படைத்திருந்தோம். அதன் பிறகு எமது கட்சியின் நூற்றுக் கணக்கான உறுப்பினர்கள் தெருத்தெருவாக சுட்டுக்கொல்லப்பட்ட வரலாறுகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எமது கட்சி உறுப்பினர்கள் ஆயுதங்கள் இன்றி நிராயுத பாணியாக நின்றிருந்த காரணத்தினாலேயே தமது இன்னுயிர்களை இழக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்தன என்பதை சகலரும் ஏற்றுக்கொள்வார்கள். ரணில் புலிகள் ஒப்பந்தம் முதல் இன்று வரை எமது கட்சி சார்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அரச பொலிசார் மட்டுமே சட்ட ரீதியிலான பாதுகாப்பை வழங்கி வருகின்றார்கள். இந்நிலையில் எமது கட்சி உறுப்பினர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவோ ஆயுதங்களால் எவரையும் அச்சுறுத்தியதாகவோ எமது மக்களிடம் இருந்து எந்த வித புகார்களும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் அதை ஆதார பூர்வமாக நிரூபித்தாக வேண்டும். இது தவிர, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் 1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் கால் பதித்திருந்தோம். 1994 ஆம் ஆண்டிலிருந்து இறுதியாக 2010 ஆம் ஆண்டு வரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தமிழ் மக்களின் அரசியல் அங்கீகாரத்தை பலத்த சவால்களுக்கு மத்தியிலும் பெற்று வந்திருந்திக்கின்றோம். அன்றிலிருந்து தொடர்ச்சியாக பதினேழு வருடங்களாக நாம் இன்று வரை நாடாளுமன்ற உறுப்புரிமைமையை பெற்றும் வந்திருக்கின்றோம். இறுதியாக 2010 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கு கிழக்கில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற ஒரேயொரு தமிழ்த் தலைவராக எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கே தமிழ் மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியும் இருக்கிறார்கள். இது தவிர இறுதியாக நடந்து முடிந்த யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் நாம் பலத்த சவால்கள் மற்றும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் 3 பிரதேச சபைகளை கைப்பற்றியிருக்கின்றோம். இது தவிர மூன்று சபைகளில் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் அந்த சபைகளை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்தை இழந்திருக்கின்றோம். ஏழு தமிழ் கட்சிகளும் அவர்களோடு கூட்டுச்சேர்ந்த துணைக்கட்சிகளும் சேர்ந்து சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில் எமக்கு பாதகமான ஒரு சூழலிலும் நாம் மட்டும் தனியொரு கட்சியாக நின்று சுமார் அறுபதினாயிரம் வாக்குகளை பெற்று எமது மக்கள் பலத்தை நாம் தெளிவாகவே நிரூபித்திருக்கின்றோம். இதிலிருந்து தமிழ் மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் யாருக்கு எமது மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பதின் மர்மம் என்ன?... உண்மையை பேசுவதாலும் எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடைமுறை சாத்தியமான வழிமுறையை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாலும் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக நீடித்து சென்று அதில் அரசியல் ஆதாயம் தேட விரும்பும் சுயலாப தமிழ்த் தலைமைகள் எம் மீதான அவதூறுகளை பரப்பி வருகின்றமை எமது மக்கள் அறிந்த விடயமாகும். இந்நிலையில் றொபேர்ட் ஓ பிளேக் அவர்களும் எம்மை துணை இராணுவக்குழு என்றும் எம்மால் சமாதானம் தடைப்படுகின்றது என்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பரப்பி வரும் செயலானது அவரது இராஐதந்திர செயற்பாடுகள் மீதான பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே எமது தமிழ் கலாசார விழுமியங்களை கொச்சைப்படுத்தியும், எமது தமிழ் பெண்களை இழிவு படுத்தியும் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் வெளியிட்டிருந்த கருத்துக்களால் அவர் மீது எமது தமிழ் சமூகம் தீராத மனவெறுப்பும் அதிருப்தியும் அடைந்திருக்கின்றது. சமாதானத்திற்காகவும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையிலான கௌரவமான ஓர் அரசியல் தீர்விற்காகவும் எம்மை ஆதரித்து எமக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியிருக்கும் தமிழ் மக்களின் விருப்பங்களை நிராகரிக்கும் றொபேர்ட் ஓ பிளேக் அவர்களின் அவதூறான கருத்துக்களை நாம் கண்டிக்கின்றோம். இவ்வாறு தெரிவித்திருக்கும் நாம் எமது மக்களின் நிரந்த அமைதிக்காகவும் அரசியலுரிமைச் சுதந்திரத்திற்காகவும் நாம் இழந்தவைகள் ஏராளம் என்றும் அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர விரும்பும் எமது மக்களுக்கான நிரந்தர மகிழ்ச்சிக்காக றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் எதையும் ஆற்ற விரும்பினால் அதை மகிழ்சியுடன் வரவேற்போம் என்றும் மாறாக எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் எம் மீது இது போன்ற பொய்யான அவதூறுகளை உள்நோக்கத்தோடு திட்டமிட்டு பரப்புவது என்பது குழப்பங்களை விளைவிக்கும் கபட நோக்கங்களில் ஒன்றாகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG