ஆடைகளைக் களைந்து மக்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருவதாக கூறி தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். இன்று வடபகுதிக்கு அனை த்து அமைச்சர்களும் படையெடுத்து வந்து அபிவிருத்தி என்ற மாயையை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் எம். பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த. சித்தார்த்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரமேச்சந்திரன், ஈ.சரவணபவன், வினோ நோகராதலிங்கம், பா. அரியநேத்திரன், பொன். செல்வராசா, எஸ். யோகேஸ்வரன், சிறீதரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசா மேலும் பேசுகையில், போரில் வெற்றி பெற்றதாக கூறும் அரசு இத் தேர்தல் மூலம் ஜனநாயகத்திலும் தான் வெற்றி பெற்றதாக காட்ட முயல்கின்றது. தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள் என்பதை முழு உலகமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அரசிற்கு ஆலவட்டம் பிடிக்கும் அமைச்சர் மட்டும் இறுதிப் போரில் எவரும் கொல்லப்படவில்லை என கூறி உங்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்.
இவ்வாறானவர்களை தூக்கி எறிய வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. தன் கணவனை கொன்றவன் மீது கோபமாக நின்ற கண்ணகி சினம் கொண்டு மதுரையை எரித்தாள். அதேபோல் இங்கும் தமது உறவுகளை பலி கொடுத்தவர்களும் பெண்களும், பெற்றோரும் உறவுகளும் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர். காணாமல் போன உறவுகள் குறித்து செய்வதறியாது நிற்கின்றனர். இவர்கள் நமக்கு நீதி கேட்டு இந்த தேர்தலில் தக்க பதில் கொடுக்க வேண்டும்.
இன்று வடபகுதிக்கு அனைத்து அமைச்சர்களும் படை எடுத்து வந்து அபிவிருத்தி என்ற மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
மனோ கணேசன்
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அங்கு பேசுகையில், தென் இலங்கையில் அரசுக்கு வாக்களித்தோர் அங்கு ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் காணவில்லை என தேடுகின்றனர். ஏனெனில் இவர்கள் எல்லாம் இங்கு உள்ளனர். மக்கள் மீது அக்கறை கொண்டு இவர்கள் இங்கு வரவில்லை. சனல் 4 தொலைக்காட்சியின் விவரணப் படத்தை பொய் என்று நிரூபிக்கவே இங்கு வந்துள்ளனர். வேட்டிக்கும், சேலைக்கும் அற்ப சலுகைகளுக்கும் விலை போகாது இங்கு வாழும் இந்திய வம்சாவளியினரும் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். _
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 20 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக