அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

கோ டானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று- எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ் ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத சக்தி டெண்டுல்கர் என்பதில் சந்தேகமே கிடையாது.
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் சச்சின். அவர் விளையாடுவதை குழந்தைகளுக்கே உரிய குஷியோடு பார்த்து ரசிப்பவர்கள்தான் அவரது ரசிகர்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் 99 சதவீதம் பேர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி ஒரு மாஸ் பவர் கொண்ட சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் சச்சின்.

சச்சினுக்கும் கூட உலகக் கோப்பை குறித்த ஏக்கம் மனதில் இருந்து கொண்டேதான் உள்ளது. எத்தனையோ சாதனைகளைப் படைத்து விட்டபோதும் அவரிடம் சிக்காமல் நழுவி வருவது உலகக்கோப்பை மட்டுமே. 2003ல் அந்த வாய்ப்பு மிக மிக அருகில் வந்தும் கூட, அந்தத் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாடியும் கூட அவரால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு இன்றளவும் ஏமாற்றம்தான்.

ஆனால் இப்போது சச்சினின் வீடு தேடி, அதாவது மும்பைக்கே வந்துள்ளது உலகக்கோப்பை. எனவே நிச்சயம் இந்த முறை கோப்பையை பெற்றுத் தருவார் சச்சின் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மேலும், இந்திய வீரர்களும் கூட சச்சினுக்காக இந்தக் கோப்பையை வெல்வோம் என்று ஏற்கனவே சபதமிடுவது போல கூறியுள்ளனர்.

சச்சினுக்கு இது 6வது உலகக் கோப்பைத் தொடராகும். கடந்த ஐந்து தொடர்களிலும் தனி முத்திரையைப் பதித்துள்ளார் சச்சின் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். கடந்த 22 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் இப்போதும் துடிப்புடன் இருப்பது மிகப் பெரிய பிளஸ்.

1999ம் ஆண்டு இந்தியா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய சச்சின்தான் காரணம். அதேபோல 2003 போட்டியிலும் கூட இந்தியாவை இறுதிப் போட்டி வரை இட்டுச் சென்றதும் அவரது அபாரமான ஆட்டம்தான்.

இந்தியா தனது முதல் உலகக் கோ்பபையை வென்றபோது சச்சினுக்கு வயது 10. அப்போது, இப்போது அவரது சக வீரர்களாக உள்ள அஸ்வின், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, பியூஷ் சாவ்லா, முனாப் படேல் ஆகியோரெல்லாம் பிறக்கக் கூட இல்லை. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

சச்சினைப் பொறுத்தவரை இந்த 6வது உலகக் கோப்பைப் போட்டி அனேகமாக அவரது கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும் இருக்கலாம்.

நடப்பு உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சினின் பார்ம் படு பக்காவாக உள்ளது. இதுவரை அவர் 464 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னால் இருக்கும் இலங்கை வீரர் தில்ஷனை விட3 ரன்கள்தான் சச்சின் குறைவாக உள்ளார்.

இந்த உலக்ககோப்பைப் போட்டியின் போது இன்னொரு உலக சாதனையைப் படைக்கவும் சச்சின் ஆவலாக உள்ளார். அது 100வது சதம் - அதாவது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 100வது சதம். பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலேயே அவர் அதைச் சாதித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நழுவிப் போய் விட்டது.

இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகளோடு நாளை சச்சினின் ஆட்டத்தையும், இந்தியாவின் வெற்றியையும் காண ரசிகர்கள் ஆவலோடு தயாராகி வருகின்றனர்.

இறுதிப் போட்டி அற்புதமானதாக இருக்கும் என்று சச்சினும் கூறியுள்ளார் என்பதால் ஆர்வம், பல மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

கிரிக்கெட் வர்னணையாளர்களும் கூட சச்சின் செய்யப் போகும் சாதனையை வர்ணிக்க அழகான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.

நாளை இந்தியாவும், சச்சினும், இந்திய ரசிகர்களும் சந்திக்கப் போகும் சவால் சாதாரணமானதல்ல. நிச்சயம் இலங்கை ஒரு வலுவான அணிதான். அதை விட முக்கியம், சச்சினைப் போலவே அங்கும் ஒரு சாதனையாளர் தனது கடைசி ஆட்டத்தை சிறப்பாக முடிக்கக் காத்திருக்கிறார். அவர் முரளிதரன். அவருக்காக கோப்பையை வென்று கொடுப்போம் என்று இலங்கை வீரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

எனவே இரு சூப்பர் ஸ்டார்களுக்காக இரு தேசங்கள் நாளை முட்டி மோதிக் கொள்ளப் போகின்றனர். இதில் எந்த சூப்பர் ஸ்டார் வெல்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதை விட முக்கியம், சச்சின், முரளிதரன் ஆகிய இருவரில் யார் அவர்களது அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தர உறுதுணையாக இருக்கப் போகிறார்கள் என்பது.

இந்தியாவின் பெருமையாக மாறியுள்ள சச்சின், நாளை இந்தியாவுக்காக கோப்பையை வென்று கொடுத்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவர் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவார் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG