அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 மார்ச், 2011

வித்தியாதரனின் வித்தகம் : ‘ விநாச காலே விபரீத புத்தி ! ’

வரவிருக்கும் வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த முயன்று வருபவர்களுள் கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள கோடீஸ்வர ஊடகவியலாளர் உதயன் வித்தியாதரனும் ஒருவர். பத்திரிகை நடாத்திப் ‘புதையல்’ எடுக்கும் வித்தையைத் தெரிந்த காரணத்தால், புகழ்பெற்ற ஊடகவியலாளரெனப் ‘பெயர்’ பெற்று ஒரு பிரமுகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர்.
‘பிழைப்பை’யே கொள்கையாக வைத்துப் பத்திரிகை நடாத்திவிட்டு, ‘புலிகள்’ அழிந்தது உறுதியான பின்னர், முழுநேர அரசியலில் நுழைந்து ஆதாயம் தேடும் அங்கலாய்ப்பில் ‘கொள்கை’க்காக உதயன் தொழிலை உதறித் தள்ளியதாக ஊர் உலகம் பூராகச் சொல்லித் திரிந்தவர். சப்றா நிதி நிறுவனம் மூலம் ஏமாற்றிப் பெற்ற ஆயிரக் கணக்கான அப்பாவி ஏழை மக்களின் - பெரும்பாலும் ஓய்வூதியர்களின் - ஆயட்கால சேமிப்பை உரமாக்கி வளர்ந்த உதயன் பத்திரிகைப் பணத்தில் ஊதியம் பெற்று பலகாலம் பணியாற்றியபோது, ‘இந்தப் பாவப் பணத்தில் நானோ எனது மனைவி பிள்ளைகளோ ஒரு குவளை தேநீர் கூட குடிக்கமாட்டோம்’ எனக் கொள்கைப் பிரகடனம் செய்து தனது பதவியைத் தூக்கி எறிய முனைந்திராத ஒரு கொள்கைக் குன்று இவர்.

மத்திக்கு மைத்துனன், மாநிலத்திற்குத் தான் என கூட்டமைப்பைக் கையடக்கக் காய்களை நகர்த்தி வருபவர் என இவரைப்பற்றிக் கூறப்படுவதுண்டு. மூன்றோ நான்கு மாதங்களுக்கு முன்னர் ‘மனித உரிமைகள் இல்லம்’ என்னும் தமிழ் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்து பின்னர் இடம் கிடைக்காமல் இடைநிறுத்தபபட்டிருந்த கூட்டமொன்றில் இவரையும் பேச்சாளர்களுள் ஒருவராகப் பெயர் குறிப்பிட்டிருந்தபோது, தமிழரசுக் கட்சித் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலமும், பேராசிரியர் சிவச்சந்திரனும் ‘இவனோடை ஒரு மேடையில் இருக்க மாட்டோம், எங்களுடைய பெயர்களை எடுத்து விடுங்கள்’ எனக் கூறும் அளவுக்கு இவரது பெருமை பிரசித்தமானது. இன்னும், ‘மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் விண்ணன்’, ‘தலைவருக்கே தண்ணி காட்டியவர்’ என இவரைப்பற்றிய பூராயம் ஏராளம்.

முதலமைச்சர் கனவில் உதயன் தொழிலுக்கு முழுக்குப் போட்ட பின்னர் உலகச் சுற்றுலாக்களின் இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இவர் இணைய ஊடகங்களுக்கு ஆலோசகராக இருந்து வருவதுபோல் தெரிகிறது.

புலம்பெயர் இணையத்தளம் ஒன்றுடன் இவருக்குள்ள உறவு தமிழ் ஊடக உலகில் இவரைப்பற்றி இப்போது உலாவித் திரியும் இன்னொரு ‘ஊடகக் கிசு கிசு’. புலம்பெயர் இணையத்தளங்கள் சில இவரைத் ‘தோலுரிக்கத்’ தொடங்கியபோது இவருக்காக வாதாட இந்த இணையத்தளம் வரிந்துகட்டிக்கொண்டு வந்ததிலிருந்து இந்த உறவு ‘ஊருக்குள்’ தெரியத் தொடங்கியிருந்தது. பின்னர், இவர் எரிக் சொல்ஹெய்மை சந்திக்கச் சென்றிருந்தபோது, இச் சந்திப்பை சிலாகித்து புத்திசீவி என இவரை புழுகி எழுதி புளகாங்கிதமடையச் செய்திருந்தது இந்த இணையத்தளம். மிக அண்மையில், வடமாகாணசபைக்கு இன்னொரு முதலமைச்சர் வேட்பாளராக வரலாம் என பேசப்படும் கிளிநொச்சி கூட்டமைப்பு பா.உ. சிறிதரனை தாக்கி இந்த இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்திருந்த செய்திகளை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

இங்கும், ‘தமிழ் மிரர்’ இணையத்தளத்தில் வாராவாரம் அரசியல் ஆய்வுகள் செய்து கொடுப்புக்குள் சிரிப்பை வரவழைக்கும் கருத்துக்கள் பலவற்றை சொல்லிவரும் பெருமைக்குரியவர் இந்த ஊடகப் ‘புத்திசீவி’. அண்மைய இந்த வாராந்தர ஆய்வொன்றில், வருகின்ற வடமாகாண சபைக்கு கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட விருப்பமுள்ளவராகக் கூறப்படும் இன்னொரு கூட்டமைப்பு பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரனை நக்கலடித்து இவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இவரது காய் நகர்த்தல்களை பலரிற்குத் தெளிவாகத் தெரிவித்திருந்தது.

உண்மையில், ஊடகவியலாளர் என உரிமை பாராட்ட இவருக்குள்ள தகுதிகள், ‘கூட்டிக் கழித்தால்’ எவையுமேயில்லை. இவர் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வந்திருந்த உதயன் பத்திரிகைகளின் உள்ளடக்கம் இவரது அறிவுக்கும், ஆய்வுத் திறனுக்கும், நேர்மைக்கும் ஒரு ஒப்புதல் சாட்சியம். பத்திரிகையைப் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒரு பாமரனுக்கு, உண்மையை உண்மையாய்ச் சொல்ல மறுத்த தமிழ் ஊடக தர்மத்தை தமிழீழத் தமிழரிற்குக் தருவித்தவர் இவரென்பது பலரின் கருத்து. முழுத் தமிழ் மக்களின் தலைவிதியையும் முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து முடித்து வைத்ததில் இவரது ஊடகப் பங்களிப்பு பரகசியமானது. யுத்தத்தின் இறுதி நிமிடம் வரை ‘தலைவர் தந்திரோபாயமாகப் பின் வாங்குகிறார்’, ‘உள்ளுக்கை விட்டு அடிக்கப் போகிறார்’ என தமிழ் ஊடக உலகில் உலா வந்திருந்த அரசியல் ஆய்வுகள் எவையும் எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல.

இந்த அறிமுகங்களுடன் இங்கு நான் சொல்ல வருவது அண்மையில் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டிருந்த யாழ் வாழைக்குலை விற்பனையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் விழாவொன்றில் அழையா விருந்தாளியாக வந்திருந்த இந்த ஊடக வியாபாரியின் ‘வாழைப்பழ பகிடி’ வகையொன்று.

இந்தச் சங்கத்; திறப்பு விழாவிற்கு இலங்கை அரசின் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்திருந்தபோது இவரும் அழையா விருந்தாளியாக வந்திருந்தார். விழாவின் ஓரத்தில் நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த இவரை அமைச்சர் கண்டுவிட்டார். அண்ணருக்கு வேலை வெட்டி இல்லாதபடியால் ஏதாவது உதவிக்கு வந்திருப்பார் என அமைச்சர் எண்ணியிருக்க வேண்டும். ‘வாருங்கோ வித்தி’ என வாய் குளிரக் கூப்பிட்டு, அங்கிருந்த சிலருக்கு ‘வருங்கால வடமாகாண முதலமைச்சர்’ எனவும் அறிமுகப்படுத்தி வைத்தார். அமைச்சர் தன்னை நையாண்டி செய்கிறார் என அண்ணருக்குப் புரிந்திருக்கவில்லை. முதலமைச்சர் அறிமுகம் அவரைக் குளிர்ச்சி செய்திருக்கவேண்டும். அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவருக்குத் தான் நெருக்கமாயிருந்தவர் என ‘அளக்க’த் தொடங்கினார். ‘நான் தான் முந்தி தினபதியிலை வேலை செய்யேக்கை உங்கட அந்தச் செய்தியைப் போட்டனான், உங்கட இந்தச் செய்தியைப் போட்டனான்’ எனத் தொடர்ந்து அமைச்சரைக் குளிர்விக்க முயன்றார். இந்தச் சம்பாசனை இன்னும் தொடர்ந்திருந்தால் ‘உவன் சரவணபவான் பச்சைக் கள்ளன்…’ எனத் தோழருக்குத் தலையில் கொண்டை கட்டி பூவும் வைத்திருப்பார் விண்ணன். ஆனால் இவர் தன்னைப்பற்றி, தான் சட்டக் கல்லூரியில் படித்து இறுதி வருட பரீட்சையை பாசாக முடியாமல் படிப்பை கைவிட்ட கதையையும் (நல்ல காலம் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஊடகப் பணியாற்ற சட்டக் கல்வியைத் துறந்ததாகச் சொல்லவில்லை), நீதி அமைச்சர் ஹக்கீம்தான் சட்டக் கல்லூரியில் தன்னை பகிடிவதை செய்தவர் எனவும் ‘தற்புராணம்’ பாடத் தொடங்கியதும் அமைச்சருக்கு அண்ணரின் பிரச்சினை விளங்கிவிட்டது. அவர் இவரைவிட்டு அங்கு வந்திருந்த மக்களுடன் அரசியல் விடயங்களைப் பேசத் தொடங்கினார். இது ஊடகப் ‘புத்திசீவி’க்கு ஆத்திரத்தை ஊட்டியிருக்க வேண்டும். எழுந்து சென்று எட்ட இருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து கொண்டார்.

அமைச்சர் அரசியல் பேசத் தொடங்கியதும், தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. கூட்டமைப்பிலுள்ள தமிழ் கட்சிகள் பலவற்றை அமைச்சர் இரட்டை அரத்தத்தில் ‘ஸ்ராண்ட் இல்லாத சயிக்கில்கள்’ எனச் சிலேடையாகத் தெரிவிப்பதுண்டு. இதில் ஒன்று, இவர்கள் ஒரு நிலைப்பாடு அற்றவர்கள் என்பது. இன்னொன்று, இவர்கள் தனித்து நின்று போட்டியிட்டு வெல்ல முடியாதவர்கள், ஒருவரோடு ஒருவர் சேர்ந்து நின்று போட்டியிடுவதால்தான் வென்று வருகிறார்கள் என்பது. அமைச்சர் இதைப் பலகாலம், பல கூட்டங்களில் பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார் என்பது பரவலாகத் தெரியும்.

அன்றும் இந்தக் கருத்தை அமைச்சர் தெரிவிக்க அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கியது ஊடகப் புத்திசீவிக்குப் பிடிக்கவில்லை. அமைச்சர் சொன்னதின் முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல் அவருக்கு இல்லையென்றாலும் கூட்டமைப்பைப்பற்றி அமைச்சர் ஏதோ கூடாமல் சொல்கிறார் என்று புரிந்திருக்க வேண்டும். கூட்டமைப்பை தமது குடும்பச் சொத்தாக்க முதலிட்டு, மைத்துனருக்கு மத்தியில் பாராளுமன்றப் பிரதிநிதிப் பதவி பெற்றதன்பின், தான் மாநிலத்தில் முதலமைச்சராகவர ‘காய்களை’ கவனமாக நகர்த்தி காத்திருப்பவருக்கு, முதலுக்கே மோசம் வருகிறதென்றால் கோபம் வரத்தானே செய்யும். அண்ணருக்குக் கோபம் வருகிறதென்று தெரிந்ததும், தோழருக்கும் அவரைக் ‘கிண்டி’ப் பார்க்கத் தோன்றியிருக்க வேண்டும். ‘என்ன வித்தி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்டு வைத்தார். ‘வித்தி’க்கு வில்லங்கமாய் போய்விட்டது. ‘நீங்களும் அரசுடன் சேர்ந்துதானே தேர்தலில் நிற்கிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே ?’ என அறிவுபூர்வமான கண்டுபிடிப்பொன்றை அவிழ்த்து விட்டார்.

அமைச்சரும், அமைச்சருடன் வந்திருந்த அவரது அரசியல் நண்பர்களும், ‘அமைச்சர் கூறவந்ததை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை. நீங்கள் கூறும் இரண்டு கூட்டுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுண்டு. அவர் கூறியதை விளங்கிக் கொள்வதற்கு ஒரே கொள்கையுடைய பல கட்சிகளின் ஒரு கூட்டமைப்பு, பல கொள்கைகளுள்ள கட்சிகள் உள்ள ஒரு கூட்டமைப்பு என கூட்டமைப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது வகையில், ஒரே கொள்கையுடைய பல கட்சிகள் ஒரு கூட்டமைப்பில் உள்ளது. உதாரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இது தேர்தலில் பல ஆசனங்களைப் பெறுவதற்கான கூட்டமைப்பு. இரண்டாவது வகையில் வௌ;வேறு கொள்கைகளுள்ள பல கட்சிகள் ஒரு கூட்டமைப்பில் உள்ளது. உதாரணம் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு. இது பல கட்சிகளுடன் சேர்ந்து அதிகாரத்தில் அமர்வதற்கான கூட்டமைப்பேயன்றி தேர்தலில் ஓட்டுக்களைச் சேர்த்து பல ஆசனங்களைப் பெறுவதற்கான ஒரு கூட்டமைப்பல்ல. அமைச்சர் இரண்டாவது வகைக் கூட்டமைப்பில் இருப்பதால் சயிக்கில் ஸ்ராண்ட் விடயம் அவரது கூட்டில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது’ என ‘வித்தி’க்கு விளங்கப்படுத்த முனைந்தனர்.

ஒரே கொள்கையுடைய பல கட்சிகளின் ஒரு கூட்டுக்கும், வேறு வேறு கொள்கைகளையுடய பல கட்சிகளின் ஒரு கூட்டுக்கும் ‘வித்தி’க்கு வித்தியாசம் தெரிந்திராதது விளங்கிக் கொள்ளக் கூடியதே. அமைச்சர் இணைந்துள்ள ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில், பல்வேறு வேறுபட்ட கருத்துக்களை உடைய கட்சிகள் ஒரு கூட்டமைப்பில் இணைந்திருக்கின்றன. இது ஒரு பல கட்சிகளின் கூட்டமைப்பு. உதாரணமாக இங்கு இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது, ட்ரொக்சியைட் கட்சி இருக்கிறது, வலதுசாரிக் கட்சிகள் எனக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருக்கின்றன. இவைகள் வௌ;வேறுபட்ட மக்கள் கூட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதால், இந்தக் கூட்டமைப்பினால் எடுக்கப்படும் முடிவுகள் பரந்துபட்ட மக்களின் நலன் சார்ந்ததாய் மிகவும் ஜனநாயக பூர்வமாயிருக்கும். இப்படியான கூட்டு, இந்தக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவுமே தவிர இந்தக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தேர்தலில் தங்கள் வாக்குகளை அதிகரிக்க உதவ மாட்டாது. உதாரணமாக, ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு என்றும் வாக்களிக்க மாட்டார். அதே போல கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர் ஹெல உறுமய கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு என்றும் வாக்களிக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி, ஒரு வலதுசாரிக் கட்சியுடன் கூட்டமைப்பில் இணைந்திருப்பதால் ஒரு இடதுசாரிக் கட்சியின் ஆதரவாளர் சிலவேளைகளில் இடதுசாரிக் கட்சிக்கே வாக்களிக்காமல் இருப்பார்.

மறுபுறத்தில், ஒரு கட்சிக் கூட்டமைப்பில் ஒரே கொள்கைகளையுடைய பல கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும். இவைகளுடைய நோக்கம் இக் கூட்டமைப்பிலுள்ள பல கட்சிகளின் வாக்குகளை ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் பெற்று தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுவது. இதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு சிறந்த உதாரணம். கூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்காகவே இப்படியான கூட்டமைப்புகள் ஏற்படுவதுண்டு.

அரசுடன் கூட்டுச் சேர்ந்து, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் தேர்தலில் நிற்பதால், அமைச்சருக்கு வாக்குக் குறைகிறதே தவிர கூடுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததொன்று. அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கே அமைச்சர் இந்தக் கூட்டமைப்பில் இருப்பது அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும். அது தவிர, வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டதால் அமைச்சருக்கு வாக்குகள் குறைந்திருந்தனவே தவிர கூடியிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குச் சார்பான குடாநாட்டுப் பத்திரிகைகள் இந்த வெற்றிலை சின்ன விவகாரத்தை பிரதானமாக்கி பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அது அமைச்சருக்கு கிடைக்க இருக்கும் வாக்குளை குறைக்கும் ஒரு விவகாரம் என்பது பிரசித்தமானது.

கடந்த பாராளுமனற தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ‘வெற்றிலை’ சின்னத்தில் அமைச்சரின் தலைமையிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த சமசமாஜக் கட்சியினர் வட மாகாணத் தேர்தலில் இக் கூட்டமைப்பில் இல்லாமல் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் சின்னத்தில் தேர்தலில் நின்றிருந்தனர். தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம வேட்பாளர், அமைச்சரின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராக தெருவில் துப்பாக்கிச் சமரே நிகழ்த்துமளவிற்கு அவர்களுக்கிடையில் முறுகல் நிலைமையேயிருந்தது. இது பத்திரிகைகளில் பிரபலப்படுத்தப்பட்டு பெரும் பிரச்சாரமே செய்யப்பட்டிருந்தது. இவை தவிர, யுத்தம் முடிவடைந்து பல தமிழ் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக பெரும் கோபத்தில் இருந்த நேரமது. எனவே இந்தக் கூட்டமைப்பில் இருந்தமையால் அமைச்சரின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருந்திருந்தனவேயன்றி கூடியிருக்கவில்லை. அப்படியிருந்தும் அமைச்சர் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், அவரின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது. அமைச்சர் தனது கட்சியின் சின்னத்தில் தனியாக நின்றிருந்தால் இன்னும் ஒரு ஆசனத்தை அதிகமாகப் பெற்றிருப்பார் என்ற கருத்து பரவலாகவே இருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த கட்சிகள் தனித் தனியே நின்றிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எழுதித் தெரியவேண்டிய தேவையேயில்லை. இவர்கள் தனித்தனியே நின்றிருந்த தேர்தல் முடிவுகள் இதனை தெளிவாகக் கூறும். தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் ‘தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று பட்டுவிட்டோம் என உலகுக்குக் காட்டுவோம்’ எனத் தேர்தல் மேடைகளில் திரும்பத் திரும்பக் கூறுவது, இவர்கள் கூட்டுச் சேர்வது ஓட்டுக்களைக் கூட்டிப் பெறுவதற்கே என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் வித்திக்கு இந்த வேறுபாடுகள் விளங்காமல், அவர் விடாப்பிடியாக இதைக் காதில் வேண்டிக் கொள்ளவே மறுத்தார். ‘அது தான் இது, இது தான் அது’ என ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வரும் கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ கொமடி வகையில் அடம் பிடிக்கத் தொடங்கினார். இறுதியில் அமைச்சருடன் அங்கு அமர்ந்திருந்த தோழர் ஒருவர் வித்தியின் பழைய வீர வசனமொன்றை அவருக்கு நினைவூட்டி அவரை வாயடைக்கப் பண்ண வேண்டி வந்தது.

அத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றாலும், விட்டாரா ‘வித்துவான்’ ?. மறுநாள் ‘உதயன்’ ‘சந்தியடிச் சோமு’வில் ‘பொல்லுக் கொடுத்து அடிவாங்கிக்கெண்ட அமைச்சர்’ எனத் தனது வித்துவத்தை விதந்துரைத்தெழுதி சுய இன்பம் கண்டு கொண்டார். அத்துடன், ஆரையோ பிடித்து ஆங்கிலத்திலும் இவ் விடயத்தை எழுதி, தனது ‘தமிழ் மிரர்’ இன் சகோதர பத்திரிகையான ‘டெயிலி மிரர்’ இலும் இரண்டு பந்திகளை நிரப்பி விட்டார்.

ஆசனங்களைப் பெறுவதற்காக ஏற்படும் கூட்டுக்கும், அதிகாரத்தில் பங்கு பெற ஏற்படும் கூட்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியாத இவருக்கு, ‘புத்தி சீவி’ என்றொரு பட்டம் வேறு. எப்படி இருக்கிறது இது ?.

0 கருத்துகள்:

BATTICALOA SONG