
.சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஜூலியா கில்லார்ட்டுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததையடுத்து அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 76 ஆசனங்களை அவர் பெற்றுள்ளார்.
150 அங்கத்தவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
தற்போதைய பிரதமர் ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சித் தலைமையிலான கூட்டணிக்கு 72 ஆசனங்களே இருந்தன. டொனி அபோட் தலைமையிலான லிபரல் - தேசிய கூட்டணிக்கு 73 ஆசனங்கள் கிடைத்தன. இதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு இரு தரப்பினரும் கடந்த 17 நாட்களாக பெரு முயற்சி நடத்தினர்.
ஜூலியா கில்லார்ட்டின் தொழிற்கட்சி நேற்றுவரை 74 அங்கத்தவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ரொப் ஒகேஷொட் மற்றும் டொனி வின்ஸர் ஆகிய சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக இன்று அறிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் தொழிற்கட்சியைச் சார்ந்த பிரதமர் கெவின் ரூட், தனது கட்சியின் ஆதரவை இழந்து பதவி விலகியதன் பின், 48 வயதான ஜூலியா கில்லார்ட் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் பதவியேற்றார். அவுஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமர் இவராவார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக