அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
லட்சக்கணக்கான பெண்கள் ஆண்டு தோறும் பிரசவ காலத்தில் இறக்கிறார்கள்
லட்சக்கணக்கான பெண்கள் ஆண்டு தோறும் பிரசவ காலத்தில் இறக்கிறார்கள்

பெண்களின் பிரசவ கால உயிரிழப்பை குறைப்பது குறித்த மாநாடு

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் வீணாக உயிரிழந்துவரும் அவலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சர்வதேச நாடுகள் பலவற்றின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.

2015ஆம் ஆண்டுக்குள் தாய்மார்களின் கர்ப்பகால மற்றும் பேறுகால உயிரிழப்புகளை மூன்றில் இரண்டு பங்கால் குறைத்துவிடுவது என்ற மில்லேனியம் முன்னேற்ற இலக்கை அடைவதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாட்டையும் நிதியையும் திரட்டுவது என்பதை ஐ.நா.மன்ற மக்கள் நல நிதியத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகில் ஆண்-பெண் இடையே சம உரிமை இல்லாதிருப்பது இப்பிரச்சினையின் மூல காரணம் என ஐ.நா. தாய் நல நிதியத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் யீவ்ஸ் பெர்ஜெவின் கூறினார்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை கரடிஜ் பகிஸ்கரிக்கிறார்

ரடோவன் கரடிஜ்
ரடோவன் கரடிஜ்
த ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றத்தில் தனக்கு எதிரான போர் குற்றச்சாட்டு மற்றும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டு ஆகியவை குறித்து நடத்தும் ஆரம்ப விசாரணைகளை முன்னாள் போஸ்னிய செர்பியத் தலைவரான ரடோவன் கரடிஜ் அவர்கள் பகிஸ்கரித்துள்ளார்.

செவ்வாயன்று இந்த விசாரணைகள் ஆரம்பிக்கும் போது கரடிஜ் அவர்கள் தொடர்ந்தும் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க மாட்டார் என்று அவர் சார்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கரடிஜ் அவர்கள் தனது தரப்பு எதிர்வாதங்களை தயார் செய்ய இன்னும் 10 மாதங்கள் தேவைப்படுவதாக அந்த சட்டத்தரணி கூறுகிறார்.

கரடிஜ் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்தால், அவருக்கு உதவ ஒரு சட்ட நிபுணர் குழுவை தாம் ஏற்பாடு செய்ய முடியும் என்று முன்னதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் கரடிஜ் அவர்கள் மறுத்துள்ளார்.


சியரா லியோன் கிளர்ச்சிக்காரர்கள் மூவர் மீதான தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன

ஃபிரீ டவுனில் அமைக்கப்பட்டிருந்த விசேட நீதிமன்றம்
ஃபிரீ டவுனில் அமைக்கப்படிருந்த விசேட நீதிமன்றம்
சியரா லியோனின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஐ.நா. மன்றத்தின் ஆதரவுடன் அந்நாட்டின் தலைநகர் ஃபிரீ டவுனில் அமைக்கப்படிருந்த விசேட நீதிமன்றம் இறுதி முடிவுகளை வழங்கியுள்ளது.

உள்நாட்டுக் கிளர்ச்சியின் தலைவர்களாக இருந்த மூன்று பேர் மீது போர்க் குற்றங்களுக்காகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் வழங்கப்பட்டிருந்த தண்டனைகளை இந்த நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

நீண்டகால சிறைவாசத்துக்கு எதிராக கிளர்ச்சித் தலைவர்கள் இந்த விசேட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

விசேட நீதிமன்றத்தில் ஒரே ஒரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. அது லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லர் மீதான வழக்கு ஆகும்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு சார்ல்ஸ் டெய்லருக்கு எதிரான வழக்கு த ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுவருகிறது.


ஆப்கான் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளர் கோரிக்கை

டாக்டர். அப்துல்லாஹ் அப்துல்லாஹ்
டாக்டர். அப்துல்லாஹ் அப்துல்லாஹ்
ஆப்கானில் இரண்டாம் சுற்று அதிபர் தேர்தலில் அதிபர் கர்சாயை எதிர்த்துப் போட்டியிடும் டாக்டர். அப்துல்லாஹ் அப்துல்லாஹ் அவர்கள் ஆப்கானின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

ஆப்கான் அதிபரின் முன்னாள் ஆலோசகரான அஷிஷுல்லா லுதின் அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு எந்த விதமான நம்பகத்தன்மையையும் விட்டு வைக்கவில்லை என்று அப்துல்லாஹ் அவர்கள் காபூலில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பக்கசார்பின்மைகான விதிகளை மீறியதாக தான் குற்றஞ்சாட்டும் மூன்று அமைச்சரவை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

நீதியானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான குறைந்தபட்ச நிபந்தனைகள் என்ற அவரது பட்டியலில் இந்த கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

செய்தியரங்கம்
இலங்கை போரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக புகார்
இலங்கை போரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக புகார்

இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய அமெரிக்க புகார்களை ஆராய உயர்மட்டக்குழு நியமனம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த சண்டைகளின் இறுதி மாதங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க உயர்மட்ட சுயாதீன குழு நியமிக்கப்படும் என்று இலங்கை கூறுகிறது.

இலங்கை இராணுவத்தாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசமான வன்செயல்கள் குறித்து அமெரிக்க அரசுத்துறை கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.

தமது இராணுவத்தினர் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


யசீகரனும், அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.

இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.


உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை--சிவத்தம்பி

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி
இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி

ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார்.

ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனையின்பேரில்தான் ஜனவரியில் நடக்கவிருந்த மாநாடு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பின்னணியில் கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத் தம்பி அவர்கள், மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG